Amazon scam
அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி இந்தியாவில் அதிகமாகிக்கொண்டே போகிறது. பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி, கையில் பொருளை பெற்றுக்கொண்டு பணத்தைச் செலுத்துவது எனப் பல்வேறு வசதிகளை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. இது போன்ற வசதிகளில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி சில சமயங்களில் முறைகேடுகளும் நடைபெறத்தான் செய்கின்றன. சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருள்களுக்குப் பதிலாக சோப்பு, செங்கல் என வேறு சில அனுப்பி வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதுண்டு. சில நேரங்களில் நிறுவனங்களே ஏமாறுவதுண்டு. அப்படி கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் செய்த மோசடி அமேஸான் நிறுவனத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஓவியம்: ஹாசிப்கான்
அமேஸான் நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருள்களை டெலிவரி செய்வதற்காக பல கூரியர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியில் பொருள்களை டெலிவரி செய்வதற்காக அங்குள்ள ஏக்தந்தா கூரியர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தர்ஷன் என்று அழைக்கப்படும் துருவா என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது இணையதள வர்த்தக நிறுவனங்கள் மூலமாக டெலிவரி செய்பவர்களுக்கு ஒரு மின்னணு கருவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி மூலமாகப் பொருள்களை டெலிவரி செய்ததையும், பணத்தைப் பெற்றுக்கொண்டதையும் அந்தந்த நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அப்டேட் செய்ய முடியும். இந்தக் கருவியில் கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கும். அதைப்போன்ற ஒரு மின்னணு கருவிதான் ஏக்தந்தா கூரியரில் பணிபுரிந்து வந்த தர்ஷனுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அதைத்தான் அவர் நூதனமான முறையில் பயன்படுத்தி பணத்தைத் திருடியிருக்கிறார்.
2017 செப்டம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், சிக்மகளூர் நகரத்தில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 4,604 ஆர்டர்களை அமேஸான் நிறுவனம் பெற்றிருக்கிறது. அந்த ஆர்டர்கள் அனைத்தையும் டெலிவரி செய்தது தர்ஷன்தான். அந்தப் பொருள்களை டெலிவரிக்கு வெளியே எடுத்துச் செல்லும் தர்ஷன் டெலிவரி செய்த பின்னர் கார்டு மூலமாகப் பொருளுக்கான பணத்தைக் பெற்றுக்கொண்டதாக ஒரு போலியான தகவலை உருவாக்கி அமேஸான் நிறுவனத்திற்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட பணம் தனது வங்கிக்கணக்கிற்குச் செல்லுமாறு மின்னணு கருவியில் மாற்றம் செய்திருக்கிறார். இதே வழியைப் பின்பற்றி ஐந்து மாதங்களில் தர்ஷன் சுருட்டிய தொகை கிட்டத்தட்ட 1.3 கோடி ரூபாய். தர்ஷனின் நண்பர்களும் இந்த மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள். அவர்களிடமும் விலை உயர்ந்த பொருள்களை அமேஸானில் ஆர்டர் செய்யச் சொல்லி பணத்தைப் பெற்றுவிட்டதைப் போல அப்டேட் செய்திருக்கிறார் தர்ஷன்
Comments
Post a Comment